சொத்து வரி செலுத்த தயக்கம் ஏன்?
திருப்பூர்; ''மாநகராட்சி சொத்து வரி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், வரி செலுத்துவோர் வரி செலுத்த தயக்கம் காட்டுகின்றனர்'' என்று நுகர்வோர் அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நுகர்வோர் அமைப்புகளின் முதலாம் காலாண்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் உரிய பகுதி தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் குறைந்த பட்சம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.அவ்வகையில், நடப்பாண்டுக்கான முதலாவது காலாண்டு ஆலோசனைக் கூட்டம் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. துணை கமிஷனர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.முதன்மை பொறியாளர் செல்வநாயகம், நகர் நல அலுவலர் முருகானந்த், உதவி கமிஷனர்கள் முருகேசன், தங்கவேல் ராஜன் முன்னிலை வகித்தனர். திருப்பூர் நகரப் பகுதியில் செயல்படும் பல்வேறு நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தினசரி மார்க்கெட் திறக்க வேண்டும்
நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்திய கருத்துகள்:திருப்பூர் தினசரி மார்க்கெட் வளாகம் உரிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, விரைவில் திறக்கப்பட வேண்டும். கடைகள் வாடகை நிர்ணயம் செய்து ஏலம் விட வேண்டும். பூ மார்க்கெட் வளாகம், சுற்றுப்பகுதியில் உள்ள கடைகளிலும், பிளாட்பாரக் கடைகளிலும் வாடகை வசூலிக்கப்படுகிறது. நகரப் பகுதியில் உள்ள அனைத்து ரோடுகளிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.அவற்றை பாரபட்சமின்றி அகற்றி போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ராயபுரம் பகுதியில் பொது இடம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. மாநகராட்சி வணிக வளாகத்தில் எந்த அனுமதியும் இன்றி தனி நபர் கடை வைத்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சொத்து வரி உயர்வு பிரச்னைக்கு எப்போது தீர்வு ஏற்படும்? குழப்பமான நிலை உள்ளதால், வரி செலுத்துவோர் அதை செலுத்த தயக்கம் காட்டுகின்றனர். பெயரில் மட்டுமேஸ்மார்ட் சிட்டி
நகரப் பகுதியில் உள்ள ரோடுகளில் பல ரோடுகள் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர் மட்டுமே உள்ளது. குக்கிராமங்களைக் காட்டிலும் மோசமான நிலையில் ரோடுகள் உள்ளன.நகரில் உள்ள தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் அதிகம் வசூலிக்கின்றனர். டோக்கனில் குறிப்பிட்டதை விட ஒரு மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.