உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அப்பாவி விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற தயக்கம் காட்டுவது ஏன்?

அப்பாவி விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற தயக்கம் காட்டுவது ஏன்?

பல்லடம் : அப்பாவி விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான ரேஷன் கடையில், தேங்காய் எண்ணெய் விநியோகிக்கும் அறிவிப்பை வெளியிடாவிட்டால், தலைமைச் செயலகத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து, அதன் ஊடகப் பிரிவு மாநில செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:தென்னை விவசாயிகளின் நலன் கருதியும், பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருள் கிடைக்கும் நோக்கிலும், ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.சோதனை அடிப்படையில் நான்கு மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்படும் என, அரசு அறிவித்த அறிவிப்பும் மாயமானது. எனவே, ரேஷனில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வலியுறுத்தி, 100 நாட்கள், 100 ரேஷன் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் துலக்கியுள்ளோம்.தேங்காய் எண்ணெய் கொடுத்தால் கட்டாயம் அதனை வாங்கி பயன்படுத்துவோம் என, ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் எங்கள் கோரிக்கையை வரவேற்கின்றனர். மேலும், அரசு தரும் பாமாயில், பேக்கரி ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதே தவிர, பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை.எனவே, அப்பாவி விவசாயிகளின், 100 நாள் போராட்டத்தை நிறைவு செய்யும் முன், ரேஷனில் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். இல்லாவிடில், தலைமை செயலகம் முன், தேங்காய்களை சிதறடித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை