உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முடங்கிய வங்கிக் கணக்குகள் புத்துயிர் பெறுமா?

முடங்கிய வங்கிக் கணக்குகள் புத்துயிர் பெறுமா?

திருப்பூர் : பண பரிவர்த்தனை, கடன்கள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு, அன்றாட வாழ்வில் வங்கி கணக்கு அனைவருக்கும் அத்தியாவசியமாகிறது. தனிநபரின் பான், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்து, வங்கிகள், கணக்கு துவக்க அனுமதிக்கின்றன.வங்கிக்கணக்கில் இணைக்கப்படும் தனிநபர் விவரங்களை சீரான இடைவெளியில் புதுப்பிக்கவேண்டியது கட்டாயமாகிறது. தொடர்ந்து பல மாதங்களாக எவ்வித பரிவர்த்தனையும் செய்யப்படாதது; கே.ஒய்.சி., எனப்படும் தனிநபர் விவரம் புதுப்பிக்காமை உள்ளிட்ட காரணங்களுக்காக வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன.செயல்படாத அல்லது முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் எண்ணிக்கையை குறைக்கவேண்டும்; அவற்றை செயல்படும் கணக்குகளாக மாற்றவேண்டும்; முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர சிறப்பு முகாம்கள் நடத்தவேண்டும் என, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.பின்னலாடை உற்பத்தியை பிரதானமாக கொண்ட திருப்பூரில், வெளி மாவட்டம், வெளி மாநில தொழிலாளர்களே அதிகம் வசிக்கின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள தனியார், பொதுத்துறை 335 வங்கி கிளைகளில், லட்சக்கணக்கான வங்கி கணக்குகள் உள்ளன. பல்வேறு காரணங்களால் ஏராளமான கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் உள்ளன. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை வங்கிகள் திறம்பட செயல்படுத்தினால், செயல்படாத கணக்குகள் எண்ணிக்கை வெகுவாக குறையும்.வங்கியாளர் ஒருவர் கூறியதாவது:பத்து ஆண்டுகள் கடந்த ஆதார் கார்டை புதுப்பிக்கவேண்டியது கட்டாயம். இல்லாதபட்சத்தில், வங்கி கணக்கில், கே.ஒய்.சி., அப்டேட் வெற்றிகரமாக நடைபெறாது. ஆதார் புதுப்பிக்காததாலேயே பலரால் வங்கியில் கே.ஒய்.சி., அப்டேட் செய்ய முடியாமல்போகிறது.திருப்பூரை பொருத்தவரை, இடம்பெயரும் தொழிலாளர் அதிகம் உள்ளனர். சில தொழிலாளர்கள், ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்துக்கு மாறும்போது, தங்கள் நிறுவனம் சார்ந்துள்ள வங்கியில் புதிதாக கணக்கு துவக்குகின்றனர்; பழைய கணக்கை கைவிட்டுவிடுகின்றனர்.தொழில் பாதிப்புகளால் சொந்த ஊர் உள்பட வேறு இடத்துக்கு இடம்பெயரும்போதும், பழைய கணக்கை அருகாமை வங்கிக்கு மாற்றாமல், புதிய கணக்கு துவக்கிவிடுகின்றனர். வங்கிகளை பொறுத்தவரை, செயல்படாத கணக்குகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி நினைவூட்டுகின்றன. செயல்படாத, முடக்கப்பட்ட கணக்குகளை சரி செய்ய வாடிக்கையாளர்கள் முன்வரவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆடிட்டர் தனஞ்செயன் கூறியதாவது:இக்காலத்தில், வங்கி கணக்கு இல்லாமல் யாரும் வாழமுடியாது. பெரும்பாலானோர், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்துள்ளனர். வங்கி சேவை எதிர்பார்த்தவகையில் இல்லாதது, இடம் பெயரவேண்டிய சூழல், குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க முடியாதது, கே.ஒய்.சி., அப்டேட் சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால், குறிப்பிட்ட வங்கி கணக்கை பராமரிக்க முடியாமல் போகிறது.வங்கிகளில் ஆன்லைனில் கூட மிக சுலபமாக கணக்கு துவக்கிவிடமுடியும்; ஆனால், வாடிக்கையாளர், பயன்படுத்தாத கணக்குகளை நிரந்தரமாக முடித்து, தொகையை திரும்ப பெறுவதற்கான வங்கி நடைமுறைகள் எளிதாக இல்லை. கே.ஒய்.சி., அப்டேட், வங்கிக்கு நேரடியாக சென்று கடிதம் அளிக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிமுறைகளை பின்பற்றவேண்டியுள்ளது. இதனாலேயே பலரும், செயல்படுத்தாத கணக்குகளை, மீட்கவோ, தானாக முன்வந்து நிரந்தரமாக முடக்கவோ செய்வதில்லை. எல்லாவகையிலும் தங்களுக்கு உகந்த வேறு வங்கியில் புதிய கணக்கு துவக்கிவிடுகின்றனர்.முடக்கப்பட்ட கணக்கில் உள்ள தொகை, பண சுழற்சிக்கு பயன்படும் என்பதால் வங்கிகளும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் எண்ணிக்கையை குறைக்கும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.அதேநேரம், அனைத்து வங்கிகளும் முன்வந்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும். குறிப்பாக, வங்கிக்கு செல்லாமலேயே மிக எளிதாக கே.ஒய்.சி., அப்டேட் செய்வது; ஆதார் - பான் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. ஒரு வங்கியில் மேற்கொள்ளும் கே.ஒய்.சி., அப்டேட், குறிப்பிட்ட நபரின் மற்ற கணக்குகளிலும் தானாக அப்டேட் ஆகும்வகையில் தொழில்நுட்ப மாறுதல் மேற்கொள்ளவேண்டும்.தேவையில்லை என கருதும் கணக்கை, வாடிக்கையாளரே சுயமாக, ஆன்லைனில் விண்ணப்பித்து நிரந்தரமாக முடித்து, தொகையை தனது வேறு வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து கொள்ளும் வசதியை கொண்டுவரவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை