உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசியில் சுகாதாரப்பணிகள் தொய்வின்றி தொடருமா?

அவிநாசியில் சுகாதாரப்பணிகள் தொய்வின்றி தொடருமா?

அவிநாசி : 'அவிநாசி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், குப்பை மேலாண்மையில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்' என, அவிநாசி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர், ஈரோடு, சேலம், சத்தியமங்கலம், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான சாலையின் சந்திப்பு பகுதியாக உள்ள அவிநாசி, 18 வார்டுகளை உள்ளடக்கிய பேரூராட்சியாக இருந்தது. அவிநாசியை பொறுத்தவரை சுகாதாரம், துாய்மைப்பணி என்பது, மாவட்டத்தின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில், சிறப்பாகவே இருந்து வருகிறது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடு, வீடாக குப்பை சேகரிப்பது, அவற்றை, கைக்காட்டிபுதுார் பகுதியில் உள்ள பேரூராட்சி 'வளம் மீட்பு பூங்கா'வில் கொட்டி, தரம் பிரிப்பது; மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள், பிற உள்ளாட்சி அமைப்புகளை ஒப்பிடுகையில் சிறப்பாகவே நடந்து வருகிறது.அவிநாசி நகராட்சியில் குப்பை மேலாண்மை பணி என்பது, விமர்சனங்களுக்கு இடமளிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலையிலேயே அது தொடர வேண்டும் என, நகர மக்கள் விரும்புகின்றனர்.நிர்வாகமே பொறுப்பு-----------------தற்போது, திருப்பூர் மாநகராட்சி, பூண்டி நகராட்சி ஆகியவற்றின் துாய்மைப்பணி தனியார்மயமாக்கப்பட்டு, பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவிநாசி நகராட்சியில் துாய்மைப்பணியை குத்தகைக்கு எடுப்பதில், தனியார் கான்ட்ராக்டர்கள் சிலர் ஆர்வம் காட்ட துவங்கியிருப்பதாகவும், நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்க துவங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுகாதாரப்பணியில் எவ்வித தொய்வும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும், அதை உறுதிப்படுத்த வேண்டியதும் நகராட்சி நிர்வாகத்தின் கடமை.

குப்பைத்தொட்டிகள் எங்கும் இல்லை

அவிநாசியை பொறுத்தவரை வீடு, வணிக வளாகம் ஆகியவற்றில், குப்பையை தரம் பிரித்து வழங்கும் திட்டம் என்பது, பெரியளவில் வெற்றி பெறவில்லை என்பதும், குப்பை கொட்டுவதற்கு இன்னும் இடம் தேவை என்பது போன்ற குறைகள் இருக்கத்தான் செய்கிறது. தினமும், குப்பை சேகரிக்கும் பணியும், அவற்றை அப்புறப்படுத்தும் பணியும் தொய்வின்றி நடப்பதால், 18 வார்டுகளில், குப்பைத்தொட்டி என்பது எங்குமில்லை என்ற நிலையில் தான், துாய்மைப்பணி கையாளப்படுகிறது. அதன் விளைவு, சுகாதாரப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் துவங்கி துாய்மைப்பணியாளர்கள் வரை, பொதுமக்களின் பெரியளவிலான அதிருப்திக்கு ஆளாகவில்லை என்றும் சொல்லலாம்.அவிநாசி பேரூராட்சி, தற்போது, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சியை பொறுத்தவரை திடக்கழிவு மேலாண்மை பணி என்பது, தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. வீடு, கடைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து குப்பை சேகரித்து, அவற்றை குப்பைக்கிடங்களில் கொட்டும் பணியை மட்டுமே தனியார் நிறுவனத்தினர் மேற்கொள்கின்றனர். மாறாக, குப்பையை தரம் பிரிப்பது, உரமாக மாற்றுவது உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் பிரதான பணிகளை அவர்கள் மேற்கொள்வதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி