அ விநாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் மட்டுமின்றி, கருவலுார், சேவூர், தெக்கலுார் உள்ளிட்ட பல ஊர்களின் நீர் வளம், மண் வளம் காத்ததில் நல்லாற்றின் பங்களிப்பு அரிது. விவசாயம் செழிக்க, தொழில் பெருக நல்லவற்றை மட்டுமே வழங்கிய நல்லாறு, அவற்றை அனுபவித்த தலைமுறையின் சுய நலத்தால், இன்று, சுரண்டலுக்கும், அழிவுக்கும் ஆளாகி, நாசக்கேடாகி இருக்கிறது. 'நல்லாறு மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும்' என்பதே, பொதுவானதொரு எதிர்பார்ப்பு. எப்படி சாத்தியமாகும்? இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை விஞ்ஞானி அசோக்குமார் வீரமுத்து கூறியதாவது: இந்தியா ஆடை உற்பத்தி துறையின் மிக முக்கிய கேந்திரமாக திருப்பூர் மாறியிருக்கிறது. மாவட்டத்தில், இயற்கையின் கொடையாக, பாரம்பரியம் சொல்லும் நீர்நிலை, ஓடை, ஏரி, குளம், குட்டைகள் நிரம்ப இருக்கின்றன. அதில் ஒன்று தான் நல்லாறு. அந்த ஆறு மட்டுமின்றி, மிச்சமுள்ள அனைத்து நீர்நிலைகளும் இன்று மிக மோசமான நிலையில் இருக்கிறது. மனித தவறாலும், தொழிற்சாலை கழிவுகளாலும் மாசுபட்டுள்ள நல்லாற்று நீர், எதற்கும் பயன்படாத நிலைக்கு மாறியிருக்கிறது. வீடுகள் துவங்கி தொழிற்சாலைகள் வரையிலான கழிவுகள் அதில் கலப்பதால், சிறு நீர் வாழ் உயிரினங்கள் கூட அதில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. செய்ய வேண்டியது என்ன? l நல்லாறு உட்பட திருப்பூர் மாவட்டத்தின் நீர் நிலைகளை மீட்டெடுக்க, ஒருங்கிணைந்த அறிவியல் ரீதியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். முதலில், ஜி.ஐ.எஸ்., மற்றும் 'ட்ரோன்' தொழில்நுட்பம் பயன்படுத்தி வரலாற்று பதிவுகளை ஆவணப்படுத்த வேண்டும். l செயற்கைகோள் படங்கள் வாயிலாக, அந்த ஓடையின் துவக்க கால பாதை, வழித்தடம், அவை சார்ந்த குளம், குட்டை, ஏரி மற்றும் நீர்வழித்தடங்களை 'மேப்பிங்' செய்ய வேண்டும். அவ்வாறு, செய்வதால் அந்த நீர் நிலையின் இயல்பு நிலை, தற்போதைய சீரழிவை புரிந்துக் கொள்ள முடியும். l அனைத்து ஓடைகளையும் துார் வாரி, அகலப்படுத்த வேண்டும்; நீர்நிலையை பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்வதன் வாயிலாக, மழைநீர் இயற்கையாகவே அதன் வழித்தடத்தில் பயணித்து, குளம், குட்டைகளை நிரப்பும். l செயற்கைகோள் படங்கள் வாயிலாக கண்டறியப்பட்ட அனைத்து சட்ட விரோத கட்டடங்களையும் அகற்ற வேண்டும். ஓடையை ஒட்டியுள்ள வீடுகள், தொழிற்சாலை உள்ளிட்ட கட்டுமானங்களில், கட்டாயம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும். l அப்பகுதியை 'பசுமை மறுசுழற்சிமண்டலமாக' அறிவிப்பதுடன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நீர்வளத்துறை, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கி 'திருப்பூர் நீர்பிடிப்பு பாதுகாப்பு அமைப்பு' ஏற்படுத்த வேண்டும். l தொடர் கண்காணிப்பு, சமூக பங்கேற்பு மற்றும் கடுமையான சட்ட திட்டங்கள் வாயிலாக மட்டுமே நல்லாறுமட்டுமின்றி, உருக் குலைந்து கிடக்கும் பிற நீர்நிலைகளையும் மீட்டெடுக்க முடியும். பசுமை மண்டலம்... எப்படி சாத்தியம்?:
நல்லாறு உள்ளிட்ட மாசுபட்ட நீர்நிலைகளில் உள்ள மாசு அளவை கணக்கிட்டு, அதை குறைப்பதற்கான வழிமுறையை பின்பற்ற வேண்டும். குப்பை கழிவுகள் ஆற்றில் கொட்டப்படாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். மாசு குறைந்த நீரில், நீர் வாழ் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள், தங்கள் வாழ்வியல் சூழலை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதன் வாயிலாக, அந்த இடத்தில் ஆரோக்கியமான உயிர்ச்சூழல் மற்றும் பல்லுயிர் சூழல் உருவாகும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஆற்றோர கரையோரம் உள்ள கிராமங்களில், மழைநீர் உறிஞ்சுக்குழிகள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம், அப்பகுதி பசுமை மண்டலமாக மாறி, வான் மழை பெய்யும் நீர், பல மாதங்களுக்கு நல்லாற்றில் பொங்கிப் பாயும்; இதன் மூலம், சுற்றியுள்ள சிற்றுார் முதல், நகரப்பகுதிகள் வரை செழிக்கும்.