துாய்மைப் பணியாளருக்கு இனியாவது நல்ல சேதி வருமா?
திருப்பூர்; நகராட்சி, மாநகராட்சியில் துாய்மைப் பணி, தனியார்மயமாக்கப்பட்டு உள்ளது. அவர்களது கட்டுப்பாட்டில் பணிபுரி யும் துாய்மைப்பணியாளர்களுக்கு, அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது தான் விதி. ஆனால், துாய்மைப் பணியாளர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. எனவே, 'குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன் வைத்து, திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு, சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. இருப்பினும், உள்ளாட்சி நிர்வாகங்கள், குறைந்தபட்ச சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். ஊரக உள்ளாட்சி ஊழியர்கள் சங்க, திருமுருகன்பூண்டி கிளை தலைவர் சுப்ரமணியம் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட நகராட்சி மண்டல இயக்குனர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் துாய்மைப் பணியாளர்கள் கூலி உயர்வு பிரச்னை தொடர்பாக, சென்னையில் உயரதிகாரிகளிடம் பேசியுள்ளனர். திருப்பூரில் கடந்த வாரம் நடந்த காத்திருப்பு போராட்டத்தில், வரும் செப்., முதல், உயர்த்தப்பட்ட கூலி வழங்கப்படும் என, உறுதியளித்துள்ளனர். மதுரையில், 5 நாள் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் அமைச்சர் நேரில் தலையிட்டு, கூலி உயர்வுடன், 'அரியர்ஸ்' தொகை வழங்கவதாக தெரிவித்துள்ளார். துாய்மைப்பணியாளர் சம்பள பிரச்னை பெரிதாகி வருகிறது. எனவே, வரும் மாதம் முதல் சம்பள உயர்வு அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கிறோம், என்றார்.