மேலடுக்கு நடைபாலம் பயன் தருமா?
அவிநாசி; அவிநாசியில் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மேலடுக்கு நடைபாலம் பணி மந்தமாக நடக்கிறது.ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நடைபாலங்கள் சமூக விரோதிகளின் புகலிடமாகி வரும் நிலையில், இந்த நடைபாலம் பணி முடிந்து, மக்களுக்குப் பயனுள்ள வகையில் மாறுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன், 'உங்கள் தொகுதி முதல்வரின் திட்டத்தில்', அவிநாசி எம்.எல்.ஏ., தனபால் பரிந்துரையின் கீழ், 2.50 கோடியில், மேலடுக்கு நடைபாலம் அமைப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் துவக்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பணிகள் படுமந்தமாக நடக்கிறது. சமூக விரோதிகள்புகலிடமாக...
அப்பகுதி வார்டு கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:நடைபாலம் கட்டுமான பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால், புதிய பஸ் ஸ்டாண்ட், கைகாட்டிப்புதுாரில் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் அமைக்கப்பட்ட மேலடுக்கு நடைபாலம் பொது மக்கள் பயன்படுத்தாமல், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு, சமூகவிரோதிகளின் புகலிடமாக மாறி விட்டது. திட்டத்தை மாற்றிஅமைத்திருக்கலாம்
மேலடுக்கு நடை மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்பது கட்டாயமான அரசின் திட்டமாக இருந்தால், அதனை அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளே இருந்து சுற்றுலா பயணியர் மாளிகை வளாகத்தில் இருக்குமாறு நடை மேம்பாலத்தை அமைத்து மாணவியர் விபத்து இல்லாமல் ரோட்டை கடப்பதற்கு திட்டத்தை மாற்றி அமைத்திருக்கலாம். கலந்தாலோசிக்கவேண்டும்
தற்போது, மக்களின் வரிப்பணமான இரண்டரை கோடி ரூபாயை பயனில்லாமல் செய்துள்ளனர். மக்களுக்கு எது தேவை என்பதை ஆளுங்கட்சியின் எம்.பி., - கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்தாலோசித்து திட்டத்தை தொகுதிக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.'விரைவில் பயன்பாடு'நடை மேம்பாலம் பணிகள் குறித்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செங்குட்டுவேல் கூறுகையில், ''இந்த மாதம் இறுதிக்குள் மேலடுக்கு நடை மேம்பாலத்துக்காக, ரோட்டின் நடுவே பில்லர் அமைத்தல், லிப்ட் பொருத்துதல், அதற்கான மின் இணைப்புகள் என அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,'' என்றார்.