நீர்நிலைகள் மீட்டெடுக்கப்படுமா?
திருப்பூர்: 'திருப்பூர் நகர மற்றும் ஊரக பகுதிகளில், ஆக்கிரமிப்பால் உருக்குலைந்துள்ள நீர் நிலைகளை மீட்டெடுக்க, உலக தண்ணீர் தின நாளில் உறுதியேற்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருப்பூர் நகரப்பகுதி தொழிற்சாலைகளால் நிறைந்திருந்தாலும், அவிநாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட ஊரக பகுதிகளில் கிராமத்து மண் வாசனை வீசுகிறது. திருப்பூருக்கென பிரத்யேக நீராதாரம் இல்லாமல் போனாலும், அமராவதி அணை, திருமூர்த்தி அணையில் இருந்து வரும் நீர் மற்றும் பவானி ஆற்று நீர் வாயிலாக, திருப்பூர் நகர மற்றும் ஊரக மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவை பூர்த்தியடைந்து வருகிறது.நொய்யல், நல்லாறு, அவிநாசி சங்கமாங்குளம், தாமரைக்குளம் என, கிராமப்புறங்களில் பல நீர் வழித்தடங்களும், நுாற்றுக்கணக்கில் குளம், குட்டைகளும் உள்ளன. மழைக்காலங்களில் மட்டுமே நிரம்பி ததும்பும் குளம், குட்டைகளில் ஆண்டு முழுக்க நீர் இருப்பதில்லை; அதே போன்று நீர் வழித்தடங்களும் ஆக்கிரமிப்பால் அடைபட்டும், தடைபட்டும் கிடக்கின்றன.பல இடங்களில் நீர் நிலைகளையொட்டி, தனியார் நிலம் உள்ள நிலையில், அங்கு எவ்வித வளர்ச்சிப்பணியும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்புகளை மீட்டெடுப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனால் திருப்பூர் நகர மற்றும் ஊரக பகுதிகளில் நீர் வளம் என்பது, நிரந்தரமானதாக இல்லை. எனவே, வருவாய்த்துறையினர் மற்றும் நீர்வளத்துறையினர் இணைந்து, நீர் நிலைகளை மீட்டெடுக்கவும், குளம், குட்டைகளின் எல்லைகளை கண்டறிவதும், அவசியம். இதுவே, உலக தண்ணீர் தினத்துக்கு தரும் முக்கியத்துவம் எனவும் கூறலாம்.
குளத்து நீர் மாசுபடலாமா?
அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான குளம், குட்டைகள் அத்திக்கடவு திட்டத்தால் நிரம்பி வரும் நிலையில், அத்திக்கடவு குளம், குட்டைகளில் நீர் வெளியேறும் குழாய்கள் முன் நின்று, குளிக்கும் செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, வட மாநில தொழிலாளர்கள் சிலர் இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர். இதனால், நீர் மாசு ஏற்படும் என்பதால், இதனை தவிர்க்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.