மலைகிராமத்துக்கு ரோடு அமையுமா? ஈசல் திட்டில் எதிர்பார்ப்பு
உடுமலை : ஈசல்திட்டு மலை கிராமத்துக்கு ரோடு அமைக்கும் திட்டம் இழுபறியாக இருப்பதால், சமவெளிக்கு வர அப்பகுதி மக்கள் சிரமப்படும் நிலை தொடர்கிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில், ஈசல்திட்டு மலைவாழ் கிராமம் அமைந்துள்ளது.ஜல்லிபட்டி அருகே, சமவெளியில் இருந்து, அடர்ந்த வனப்பகுதியில், மேடு, பள்ளமான பாதையில், 5 கி.மீ., துாரம் நடந்தே ஈசல்திட்டு கிராமத்துக்கு செல்ல முடியும்.ரோடு வசதியில்லாததால், அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட சமவெளிக்கு வர அப்பகுதி பழங்குடியின மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். நோயாளியை தொட்டில் கட்டி, மூங்கில் குச்சியில் சேர்த்து சறுக்கல் நிறைந்த பாறைகள் வழியாக வனப்பகுதியில், துாக்கி வருகின்றனர். இதே போல், மலைப்பகுதியில், மொச்சை உள்ளிட்ட சாகுபடியிலும் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், விளைபொருட்களை சந்தைப்படுத்த சமவெளிக்கு வர முடியாத நிலை உள்ளது.தலைச்சுமையாக விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, ஈசல்திட்டு கிராமத்துக்கு ரோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து அதிகாரிகள் தரப்பில் பல முறை ஆய்வு செய்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஈசல்திட்டு மலைவாழ் கிராமத்துக்கு ரோடு அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி, நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.