உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தக்காளிக்கு நிரந்தர விலை கிடைக்குமா?

தக்காளிக்கு நிரந்தர விலை கிடைக்குமா?

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. சாகுபடியாகும் தக்காளி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.சொட்டு நீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள், வீரிய ரக நாற்றுகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களால், விளைச்சல், பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தாண்டு தென் மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கி, பரவலாக பெய்தது. விவசாயிகள் வழக்கத்தை விட கூடுதல் பரப்பில், தக்காளி சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. சில மாதங்களில், தேவையை விட வரத்து அதிகரிக்கும் போது, தக்காளிக்கு விலை கிடைக்காது. சந்தையில் ஏலம் போகாத பல ஆயிரம் டன் தக்காளியை ரோட்டோரங்களில் விவசாயிகள் கொட்டும் நிலை ஏற்படும். ஆண்டுதோறும் இப்பிரச்னை தொடர்கதையாகவே உள்ளது.செம்மண் விளைநிலங்கள் மற்றும் சொட்டு நீர் பாசனத்தில், தக்காளியை மட்டுமே சாகுபடி செய்ய வேண்டியுள்ளதால், மாற்று சாகுபடிக்கும் விவசாயிகள் செல்ல முடிவதில்லை. பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, தக்காளியை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தமிழக அரசு உதவ வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது. தக்காளியில் இருந்து ஜாம் உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முடியும். ஆனால் அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லை.இத்தகைய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய தொழிற்சாலையை விவசாயிகளே செயல்படுத்தும் வகையில், தக்காளி உற்பத்தியாளர் நிறுவனங்களை துவக்கி, தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். அல்லது தேர்தலுக்கு தேர்தல், தக்காளி 'ஜாம்' தொழிற்சாலையை துவக்குவோம் என வாக்குறுதி கொடுக்கும் அரசியல் கட்சியினர், ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த வாக்குறுதியை மறக்காமல், செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ