தேக்கமடைந்த குப்பைகள் அகற்றும் பணி துவக்கம்
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றும் பணி நேற்று துவங்கியது. ''இரு நாளுக்குள் முழுமையாக அகற்றப்படும்; திடக்கழிவு மேலாண்மைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்'' என மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும், 800 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் சேகரமாகிறது. இவை, நகரைச் சுற்றியுள்ள பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. ஏராளமான பாறைக்குழிகள் குப்பை கழிவுகள் கொட்டி மூடப்பட்டுள்ளன.கடந்தாண்டு அக்., மாதம் முதல், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பாறைக்குழியில், குப்பை கொட்டி நிரப்பும் பணி நடந்து வந்தது. இதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பாறைக்குழியில் குப்பை கொட்டப்படவில்லை. இதனால், திருப்பூர்நகரப் பகுதி முழுவதும் குப்பை மலைபோல் தேங்கியது.நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் நேற்று வாகனங்கள் மூலம் குப்பை கொட்டும் பணி துவங்கியது.நேற்று மாலை வரை 100க்கும் மேற்பட்ட லோடு குப்பைகள் கொட்டப்பட்டன. குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து திரண்ட சிலரை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 'குப்பை காலியாகும்'
மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:காளம்பாளையம் பாறைக்குழியில் முழுமையாக குப்பை கொட்டி நிரப்பப்பட்டுள்ளது. சில நாட்களில் தேங்கியுள்ள குப்பைகள் சற்று இளகி, கீழே இறங்கும். அதன்பின் மண் கொட்டப்படும். அங்கு சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்படும். இதுதவிர, ஊராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி திறந்த வெளி மார்க்கெட் அமைப்பு ஏற்படுத்தப்படும்.தற்போது நெருப்பெரிச்சல் பாறைக்குழியிலும் அனைத்து வகை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள் கொட்டப்படும். இதற்கு நிபுணர்கள் பரிந்துரைத்தபடி மருந்து, திரவம் மற்றும் பந்துகள் பயன்படுத்தி, துர்நாற்றம் ஏற்படாத வகையில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படும்.சுற்றுச்சூழல் மாசுபடாமலும், நீர்நிலைகள் பாதிக்காத வகையிலும் உரிய பாதுகாப்பு மேற்கொள்வதில் உறுதியாக உள்ளோம்.இதுதவிர, 20 பேர் அடங்கிய கண்காணிப்பு குழு, பாறைக்குழி சுற்றுப் பகுதியில் பணியில் இருக்கும். இரண்டு ஆட்டோ முழுமையாக மருந்து உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும்.சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து சுற்றுப்பகுதியினருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். நேற்று முதல் கட்டமாக ஒரு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.நெருப்பெரிச்சலில் குப்பை கொட்ட5 நாள் அனுமதி கேட்ட மாநகராட்சிதிருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகள் நெருப்பெரிச்சல் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டி வந்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஐந்து நாட்களுக்கு பின், நேற்று காலை மீண்டும் அங்கு குப்பை கொட்டும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். பா.ஜ., மாவட்ட தலைவர் சீனிவாசன், தலைமையில் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குப்பை கொட்ட வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து சென்ற மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி (பொறுப்பு) ''குப்பை கொட்ட வேறு இடம் பார்த்து கொண்டு இருக்கிறோம். வரும் புதன்கிழமை வரை குப்பை கொட்ட அனுமதிக்க வேண்டும்,'' என்றனர். அதனை பொதுமக்கள் ஏற்று கொண்டதால், போலீஸ் பாதுகாப்புடன் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.