உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளர்கள் பதிவு அவசியம்; விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுரை

தொழிலாளர்கள் பதிவு அவசியம்; விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுரை

உடுமலை; தொழிலாளர்கள் குறித்து பதிவு செய்து சான்று பெற வேண்டும், என உடுமலையில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில், தொழிலாளர் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.உடுமலை வியாபாரிகள் சங்க அலுவலகத்தில், திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார், வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.இதில், தொழிலாளர் நல சட்டங்கள், இணையவழி சேவைகள், தமிழில் பெயர் பலகை வைத்தல், சட்டமுறை எடையளவு சட்டம், பொட்டலப்பொருட்கள் சட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.மேலும், தமிழில் பெயர்பலகை அமைப்பது தொடர்பான சட்டவிதிகளில், தமிழக அரசு சில திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது. அனைத்து வணிக நிறுவனங்களிலும், தமிழில் பெயர் பலகை வைக்காதது,தமிழ் மொழியை முன்னிலைப்படுத்தாமல், பிற மொழியில் பெயர் பலகை அமைக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை, ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, இருக்கை வசதிகள் செய்து தர வேண்டும்.கடைகள் மற்றும் நிறுவனங்களில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்தால், ஆறு மாத காலத்திற்குள் https://labour.tn.gov.inஎன்ற வலைத்தளத்தில் படிவம் 'Y'- ல் விண்ணப்பித்து பதிவு சான்று பெற வேண்டும்.5க்கும் மேல், வெளி மாநில தொழிலாளர்களை இருந்தாலும் பதிவுச்சான்று பெறுவதோடு, நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும், உள்ளிட்ட சட்டங்கள், விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இதில், உடுமலை, தாராபுரம், காங்கேயம் உட்பட அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், தொழிலாளர் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.முன்னதாக, உடுமலை பஸ் ஸ்டாண்ட் மற்றும் பிரதான ரோடுகளில் அமைந்துள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில், திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், தமிழில் பெயர் பலகை வைத்தல் தொடர்பாக, 22 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 15 நிறுவனங்கள் விதி மீறல் கண்டறியப்பட்டது.மேலும், சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ், 10 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில்லறை விற்பனை விலையை விட, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த, 3 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை