குளிக்க சென்ற 4 சிறார்கள் நீரில் மூழ்கி பலி
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அடையபுலம் அண்ணா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குப்புசாமி, 45. இவர் மனைவி அஞ்சலை, 42. இவர்களின் மகன் மோகன்ராஜ், 13, மகள் வர்ஷா, 9. இருவரும் அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் முறையே, 8ம் வகுப்பு மற்றும், 4ம் வகுப்பு படித்து வந்தனர்.அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விநாயகம், 36, செல்வி, 32, தம்பதியின் மகள்கள் கார்த்திகா, 8, தனிஷ்கா, 4. அங்குள்ள அரசு பள்ளியில் முறையே, 3ம் வகுப்பு மற்றும் அங்கன்வாடியில் படித்து வந்தனர். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மாலை, 5:00 மணிக்கு, அங்குள்ள ஓடைத்தாங்கல் ஏரியில் குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமானதால், அவர்களை தேடி பெற்றோர் சென்ற போது, நீரில் மூழ்கி, நான்கு பேரும் பலியானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.