வங்கதேச முகாமில் 65 பேர் தர்ணா சொந்த நாட்டுக்கு அனுப்ப கோரிக்கை
ஆத்துார், வங்கதேச முகாமில் உள்ள, 59 பேரை, சொந்த நாட்டுக்கு அனுப்பக்கோரி, 65 பேர் உள்ளிருப்பு தர்ணா வில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், வங்கதேச முகாம் உள்ளது. இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், வேறு வழக்கில் தொடர்புடையவர்கள் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின், சிறை காலம் முடிந்து வெளியே வந்தவர்கள் என, 125 பேர், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் தண்டனை காலம் முடிந்த, 50 பேர், 9 சிறுவர்களை, சொந்த நாட்டுக்கு அனுப்பும்படி கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து தண்டனை முடிந்தவர்களது பட்டியல், அவர்களது நாட்டுக்கு அழைத்துச்செல்வதற்கான ஆவணங்களை, மத்திய அரசிடம் ஒப்படைத்தனர்.இந்நிலையில், 59 பேரை வங்கதேச நாட்டுக்கு அனுப்பும்படி, நேற்று காலை, 11:00 மணிக்கு, முகாமில் அமர்ந்து, 65 பேர் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்துார் டவுன் போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சு நடத்தினர். மதியம், 2:30 மணிக்கு தர்ணாவை கைவிட்டனர்.இதுகுறித்து போலீசார், வருவாய்த்துறையினர் கூறுகையில், 'தண்டனை காலம் முடிந்தவர்களது பட்டியல் விபரங்கள், சேலம் கலெக்டர் மூலம், இந்திய அரசின் துாதரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. துாதரகமும், வங்கதேச நாட்டுக்கு ஆவணங்களை அனுப்பிய நிலையில், அவர்களை, அந்நாட்டுக்கு அழைத்துச்செல்வதற்கான உத்தரவு வழங்காமல் உள்ளனர்' என்றனர்.