பலான ஆசிரியரை முட்டி போட வைத்து தாக்கியவர் கைது
சேத்துப்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரை, ஆசிரியர் தனகரசு என்பவர், சில நாட்களுக்கு முன், மது போதையில், ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த ஆடியோ வெளியாகி பெற்றோர், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து மாணவியின் அண்ணன் சதீஷ், 23, அவரது நண்பர்கள் 23 - 24 வயதுடைய ஐந்து பேர், கடந்த, 12ம் தேதி ஆசிரியர் தனகரசுவை அழைத்து சென்று, முட்டி போட வைத்து, அடித்து உதைத்து, அந்த வீடியோவை இணையதளத்தில் பரவ விட்டனர்.இந்த சம்பவத்திற்கு பின், தனகரசுவை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அவரை தாக்கிய, மாணவியின் அண்ணன் சதீஷ் உள்ளிட்ட ஆறு பேர் மீது சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று சதீஷை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஐவரை தேடி வருகின்றனர்.