கிரிவல பாதையில் 21 குளங்கள் துார்வாரி துாய்மைப்படுத்தும் பணி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் 21 குளங்கள் துார்வாரி, துாய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. திருவண்ணாமலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரக வளர்ச்சி துறை மற்றும் துாய்மை அருணை இயக்கம் இணைந்து, கிரிவலப்பாதை சுற்றியுள்ள குளங்களை துாய்மைப்படுத்தும் பணியை, அமைச்சர் வேலு தொடங்கி வைத்தார். இதில், நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்கள், துாய்மை அருணை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வரட்டு குளம் உள்ளிட்ட, 21 குளங்களை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கிரிவலப்பாதையை சுற்றியுள்ள குளங்களை துாய்மைப்படுத்தி குளங்களிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் மட்காத குப்பையை அகற்றுவதன் மூலமாக, நிலத்தடி நீர் மட்டம் உயரும், மண் வளம் பெறும். கிரிவல பாதையில் பக்தர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் குப்பையை குளங்களில் வீசுவதை தவிர்க்க வேண்டும். கிரிவல பாதையை துாய்மையாக வைத்திருக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.