வந்தவாசி அருகே குடும்ப தகராறு அண்ணன் நாக்கை துண்டாக்கிய தம்பி
வந்தவாசி: வந்தவாசி அருகே, குடும்ப தகராறில் அண்ணன் நாக்கை துண்டாக்கிய தம்பியை, போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரியகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் முருகன், 42. இவரது தம்பி கூலித்தொழிலாளி ஆனந்தன், 38. இருவரும் தனித்தனி வீட்டில் வசித்தாலும், மின் இணைப்பு ஒன்றாகவே உள்ளது. இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 14 ல் இரவு, 9:00 மணிக்கு ஆனந்தன் வீட்டில் மின் ஒயர் பழுதால் மின் தடை ஏற்பட்டது. மெயின் சுவிட்சை ஆனந்தன் ஆப் செய்தார். இதனால், முருகன் வீட்டிலும் மின்தடை ஏற்பட்டது. இதனால், இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆனந்தன், தந்தை ஆறுமுகம், ஆனந்தனின் மனைவி ஜீவிதா ஆகியோர், முருகனிடம் தகராறில் ஈடுபட்டனர். ஆத்திரத்தில் வாய் மீது ஆனந்தன் குத்தியதில், முருகனின் நாக்கு துண்டானது. அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நாக்கு ஒட்டுவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தெள்ளார் போலீசார் விசாரித்து, தலைமறைவான ஆனந்தன், ஜீவிதா மற்றும் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.