உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / போலி நகைக்கு ரூ.3 கோடி வங்கி பெண் மேலாளர் கைது

போலி நகைக்கு ரூ.3 கோடி வங்கி பெண் மேலாளர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில், கவரிங் நகைகளை அடகு வைத்து, 3 கோடி ரூபாய் மோசடி செய்த வங்கி பெண் மேலாளர் உட்பட மூவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, தொடர்புடைய, 20 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். திருவண்ணாமலை டவுன், காந்தி நகர் மத்திய கூட்டுறவு வங்கியின், கிழக்கு கிளை அலுவலகத்தில், கருமாரபட்டி ராமதாஸ், அரடாப்பட்டு ஏழுமலை, 45, ஆகியோர் கடந்தாண்டு, நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றனர். அவர்களிடம், வங்கி மேலாளர் விஜயலட்சுமி, 51, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன், 48, ஆகியோர், ரகசியமாக பேசி, கவரிங் நகைகளை அடகு வைத்து, பண மோசடியில் ஈடுபட திட்டம் தீட்டினர். அதற்கு ஏழுமலை, ராமதாஸ் ஆகியோர் சம்மதித்து, ஏஜன்ட் போல செயல்பட்டு, 20க்கும் மேற்பட்டோர் பெயரில், கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்து, 3 கோடி ரூபாய் பெற்றனர். ஐந்து மாதங்களுக்கு முன், கூட்டுறவு வங்கி தணிக்கை பிரிவு அதிகாரிகள், நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது, ராமதாஸ், ஏழுமலை உட்பட, 22 பேரின் பெயரில், கவரிங் நகைகளை வைத்து, 3 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து, தணிக்கை பிரிவு அதிகாரிகள், போலீசில் புகார் செய்தனர். திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு, விஜயலட்சுமி, கோபிநாதன், ஏழுமலை ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும், வங்கியில் கவரிங் நகைகளை வைக்க, முகவராக செயல்பட்ட ராமதாஸ் மற்றும் கவரிங் நகைகளை வைத்து பணம் பெற்ற, 20 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை