உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / காதலியை குழந்தையுடன் தவிக்கவிட்டு வேறு பெண்ணை மணந்தவர் கைது

காதலியை குழந்தையுடன் தவிக்கவிட்டு வேறு பெண்ணை மணந்தவர் கைது

வந்தவாசி:திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, காதலியை கர்ப்பிணியாக்கி, குழந்தையும் பிறந்த நிலையில், தலைமறைவாகி வேறு பெண்ணுடன் திருமணம் செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அடுத்த காயலுாரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 30; திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுணா, 26. இருவரும், 2015 முதல் 2020 வரை சென்னை தி.நகர் ஜவுளி கடையில் வேலை பார்த்தனர். அப்போது இருவரும் காதலித்தனர்; அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இந்நிலையில், 2021 கொரோனா காலகட்டத்தில் ஜவுளி கடைகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. சொந்த ஊருக்கு செல்லாமல், திருநாவுக்கரசுடன் திருமணம் செய்யாமல் மனைவி போல வாழ்ந்த சுகுணாவிற்கு, 2021ல் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, திருமணம் செய்து கொள்வதாக கூறிய திருநாவுக்கரசு, சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்று, தலைமறைவானார். சுகுணா, சென்னை தி.நகர் போலீசில் புகார் அளித்தபோது, போலீசார் மனுவை பெற மறுத்தனர். இதனால், ஜூலை 17ம் தேதி வந்தவாசி மகளிர் போலீசில் சுகுணா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசின் சொந்த ஊருக்கு சென்று கண்காணித்ததில், அவர் வேம்பு என்ற பெண்ணை திருமணம் செய்து, அவருக்கு தற்போது 2 வயதில் பெண் குழந்தை இருப்பது தெரிய வந்தது. திருநாவுக்கரசுவை போலீசார் கைது செய்து, வந்தவாசி அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !