கணவன் முன் மனைவி நீரில் மூழ்கி பலி
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சென்னாத்துார் லாடவரத்தைச் சேர்ந்தவர் தனியார் பஸ் டிரைவர் சேதுபதி, 29. இவரது மனைவி மகாலட்சுமி, 22. இவர்களுக்கு மகள் உள்ளார். சேதுபதிக்கு சொந்தமான விவசாய நிலம் சங்கீதவாடியில் உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக அவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்து இருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் சேதுபதி, இவரது மனைவி மகாலட்சுமி மற்றும் உறவினர்கள் இருவர் என, நான்கு பேர் கிணற்றில் குளித்து கொண்டிருந்தனர். இதில், மகாலட்சுமிக்கு நீச்சல் தெரியாததால் இடுப்பில் கயிற்றை கட்டி கொண்டு, மற்றொரு முனையை கரை மீது கல்லில் கயிற்றை கட்டிவிட்டு, கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.அப்போது கயிறு திடீரென அறுந்ததால், நீரில் மூழ்கி அலறி கூச்சலிட்டார். உடனிருந்த கணவன் சேதுபதி மற்றும் உறவினர்கள் இருவரும் மகாலட்சுமியை மீட்க முயன்றனர்; முடியவில்லை. நீரில் மூழ்கி அவர் இறந்தார். ஆரணி தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடி மகாலட்சுமியை சடலமாக மீட்டனர்.