டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
தண்டராம்பட்டு திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில், டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக ஏழுமலை, 45, விற்பனையாளர்களாக குபேந்திரன், 38, ஜெயக்குமார், 41, ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மூவரும் பணியில் இருந்தபோது, மதுபாட்டில் வாங்கிய ஒரு வாலிபருக்கும், ஊழியர்களுக்கும் இடையே சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது.பின்னர், ஊழியர்கள் சில்லரை தராத ஆத்திரத்தில் வாலிபர், மது குடித்த பாட்டிலில், அவரது பைக்கிலிருந்து பெட்ரோலை பிடித்து பற்ற வைத்து, டாஸ்மாக் கடை மீது வீசினார். அதிர்ஷ்டவசமாக குறி தப்பி, கடையின் சுவற்றின் மீது பட்டது. இருப்பினும் தீப்பிடித்து எரிந்ததால், அங்கிருந்த ஊழியர்கள், மது வாங்க வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசியவர் அங்கிருந்து தலைமறைவானார். இது குறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், பெட்ரோல் குண்டு வீசியவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், காங்கேயனுாரை சேர்ந்த கூலி தொழிலாளி பிரதீப், 26, என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.