| ADDED : மே 29, 2024 02:03 AM
மணப்பாறை,:மணப்பாறை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், கவரிங் நகைகளை அடகு வைத்து, 48 லட்சம் ரூபாய் மோசடி செய்த, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அக்ரஹாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2018ல் மாணிக்கம் என்பவர் நகை மதிப்பீட்டாளராக இருந்தார். இவரின் துணையோடு, 18 பேர் கவரிங் நகைகளை கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்து, 48 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது கூட்டுறவு சங்கத்தின் தணிக்கையில் அண்மையில் தெரிய வந்தது.திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மாணிக்கம் உள்பட, 19 பேரை விசாரித்தனர். விசாரணையில், கவரிங் நகைகளை அடகு வைத்து, மோசடியில் ஈடுபட்ட மணப்பாறை பகுதியைச் சேர்ந்த ஜான்பீட்டர், சுகந்தி உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். மீதியுள்ள, ஒன்பது பேரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக இருப்பவர்களில், நடராஜன் என்பவர், வையம்பட்டி யூனியன் தி.மு.க., சேர்மன் குணசேகரனின் தந்தை.