உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அமேசானில் வாங்கிய நுாடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பலி

அமேசானில் வாங்கிய நுாடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பலி

திருச்சி : திருச்சியில், அமேசான் ஆன்லைனில் நுாடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி இறந்ததை அடுத்து, நுாடுல்ஸ் கிடங்குகளில் சோதனை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டது. காலாவதியான நுாடுல்ஸ் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.திருச்சி, அரியமங்கலம் அருகே, கீழ அம்பிகாபுரத்தை சேர்ந்த, ஜான் ஜூடி மெய்ல் என்பவரது மகள், ஜான் ஸ்டெபி ஜாக்குலின், 15. திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்த இவர், கடந்த 1ம் தேதி, அமேசான் ஆன்லைனில் ஆர்டர் செய்து, நுாடுல்ஸ் வாங்கி உள்ளார்.

பரிசோதனை

அதை, இரவு உணவாக சாப்பிட்டு துாங்கிய சிறுமி, மறுநாள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறையினர், சிறுமியின் வீட்டுக்கு சென்று, நுாடுல்ஸ் பாக்கெட்டை கைப்பற்றி விசாரித்த போது, கொரியா நாட்டு தயாரிப்பான, 'புல்டாக்' நுாடுல்ஸ் என்பது தெரிந்தது.அதை விற்பனை செய்த கடை மற்றும் குடோனில் சோதனை செய்த போது, அதே போல, 800 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் இருப்பு வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாதிரி எடுத்து, சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'சிறுமி உட்கொண்ட நுாடுல்ஸ் சாம்பிள் எடுத்து, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுாடுல்ஸ் தயாரிப்புக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை தான். பெரிய வித்தியாசம் இல்லை. 'சிறுமி உட்கொண்ட உணவுப் பொருள் காலாவதியானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அது பற்றி விசாரித்து வருகிறோம்' என்றனர்.இதற்கிடையே, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர்கள் மகேஷ், நேரு ஆகியோர், குரங்கம்மை நோய் பாதிப்புக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின், அமைச்சர் சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருச்சி, அரியமங்கலத்தில், ஜாக்குலின் என்ற 15 வயது சிறுமி, 'அமேசான்' நிறுவனம் மூலம், 'புல்டாக்' என்ற நுாடுல்ஸ் மற்றும் கோக் வாங்கி சாப்பிட்டுள்ளார். அதன் பின், அவர் இறப்பு செய்தி அறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நுாடுல்ஸ் விற்பனை செய்யும் இடங்களில் ஆய்வு செய்தனர். அதில், 800 கிலோ காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவற்றை கைப்பற்றி ஆய்வகத்துக்கு அனுப்பிஉள்ளனர். இவ்வாறு கூறினார்.

கிடங்குகளுக்கு 'சீல்'

திருச்சியில் காலாவதியான நுாடுல்ஸ் சாப்பிட்டதால், சிறுமி பலியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் காலாவதியான நுாடுல்ஸ் வைத்திருக்கும் கிடங்குகளை கண்டறிந்து 'சீல்' வைக்க, உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறை கமிஷனர் லால்வேனா உத்தரவிட்டுள்ளார்.அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரிகளுக்கும், துறை கமிஷனர் லால்வேனா அனுப்பிஉள்ள உத்தரவு:அனைத்து மாவட்டங்களிலும், நுாடுல்ஸ் தயாரிப்பு, விற்பனை, சேமிப்புக் கிடங்குகளில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதில், பாக்கெட்டுகளில் தரச்சான்று, பேட்ஜ் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.காலாவதியான பாக்கெட்டுகள் கிடங்கில் இருந்தால், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கிடங்கை மூடி சீல் வைக்க வேண்டும். அதேபோல், இறக்குமதி சான்றிதழ் இல்லாமல், வெளிநாட்டு உணவுப்பொருட்களை விற்பனை செய்தாலும், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாசனையில் தான்!

நுாடுல்ஸ் தயாரிப்பு மூலப்பொருள் அநேக மாக ஒரே மாதிரியானவை தான். எனினும், அதில் கூடுதலாக சேர்க்கப்படும் வாசனை ஊட்டி தான், பல இடங்களில் பிரச்னைக்கு காரணமாக இருந்துள்ளது. சீனா மற்றும் கொரியா தயாரிப்பு நுாடுல்ஸ்களில் மாமிச கொழுப்பு கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. சமீப காலமாக, தமிழகத்தில் கொரியா நாட்டின் 'டிவி' சீரியல்களுக்கும், உணவுக்கும் மவுசு அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, கொரியா தயாரிப்பு நுாடுல்ஸ் வாங்க பலரும் விரும்புகின்றனர். நுாடுல்ஸ் சாப்பிட்டதால் இறந்ததாக கூறப்படும் சிறுமியும், கொரியா தயாரிப்பு புல்டாக் நுாடுல்ஸ்சை தான் சாப்பிட்டுள்ளார். அதை உண்டதால் தான் சிறுமி இறந்தார் என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.நுாடுல்ஸ் போன்ற உணவுகள் கெட்டு போகாமல் இருக்க, அந்த பாக்கெட்டில் சேர்க்கப்படும் வாயு, நம் நாட்டில் சேர்க்கப்படுவது போன்றவை இல்லை என்ற கருத்தும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

theruvasagan
செப் 04, 2024 16:43

இந்த சம்பவம் ஒரு நாள் வாங்கி சாபிட்டதினால் இருக்காது. இந்த உணவை மீண்டும் மீண்டும் அளவுக்கதிகாமாக சாப்பிட்டதனால் வந்த பாதிப்பாக இருக்க வேண்டும். இந்த சிறுமியைப் போல பல சிறுவயதினர் துளிகூட நன்மையில்லாத அந்நிய நாட்டு உணவு வகைகளை வெறித்தனமாக சாப்பிட்டு வரும் நிலைக்கு வந்துவிட்டனர். இது ஆபத்தில்தான் கொண்டு விடும். பெற்றோர்களும் நமது பாரம்பரிய உணவுகளின் நன்மைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி புரிய வைப்பதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை