உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அரசு கல்லுாரிக்கு பஸ் வசதி கிடைக்குமா? மாணவர்கள் எதிர்பார்ப்பு

அரசு கல்லுாரிக்கு பஸ் வசதி கிடைக்குமா? மாணவர்கள் எதிர்பார்ப்பு

திருச்சி:மணப்பாறை அருகே ஊருக்கு ஒதுக்குபுறமாக கட்டப்பட்டுள்ள அரசு கலைக்கல்லுாரிக்கு, போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த, 2021ம் ஆண்டு மணப்பாறையில் புதிய அரசு கலைக்கல்லுாரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்த ஆண்டே பன்னாங்கொம்பு அரசு பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு, கல்லுாரி செயல்படத் துவங்கியது. பின் மணப்பாறை அரசுப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. ஐந்து பாடப்பிரிவுகளுடன் துவங்கிய கல்லுாரியில் தற்போது, 280 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.இந்நிலையில், சமத்துவபுரம் அருகே, 14.94 கோடி ரூபாய் மதிப்பில், அரசு கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட கல்லுாரி கட்டடம், மெயின்ரோட்டில் இருந்து, இரண்டு கிலோமீட்டர் துாரம், மலைப்பாதையில் செல்லும் வகையில் உள்ளது. ஆகையால், கல்லுாரிக்கு நேரடி பஸ் வசதி கிடையாது. இதையடுத்து கல்லுாரிக்கே செல்லும் வகையில், பஸ் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இல்லாவிட்டால் மாணவர்கள், 2 கிலோமீட்டர் நடந்த செல்ல வேண்டும்.இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், 'மணப்பாறை நகர் பகுதியில் கல்லுாரி அமைத்திருந்தால், இந்த பிரச்னை இருந்திருக்காது. இது, ஊருக்கு வெளியே அமைத்துள்ளதால், மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆகையால், உரிய பஸ் வசதியை காலை மற்றும் மாலை நேரங்களில் போதுமான பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி