| ADDED : ஜூன் 28, 2024 11:48 PM
திருச்சி:திருச்சி மாவட்டம், மரவனுார் அருகே உள்ள சமுத்திரத்தைச் சேர்ந்தவர் கலையரசன், 32. இவர் மரவனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளராக பணியாற்றினார். கடந்த ஆண்டு ஜூலை, 26ம் தேதி, மணப்பாறை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுப்பணியில் இருந்த கலையரசனை, அங்கிருந்த டாக்டர் மற்றும் நர்சுகள், கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்தக் கூறினர்.மருத்துவக் கழிவுப்பொருட்களை தீயிட்டுக் கொளுத்தும் போது, மேலேழும்பிய தீ, கலையரசன் உடலில் பற்றியது. உடலில் தீயுடன் மருத்துவமனை வளாகத்தில் ஓடிய கலையரசன், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.இந்நிலையில், பணியில் இருந்தபோது உயிரிழந்த கலையரசன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வக்கீல் அலெக்ஸ் என்பவர் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கலையரசன் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்கவும், அந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும், திருச்சி எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார்.