திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து 38 கி.மீ., தொலைவில் பச்சமலையின் கிழக்கு பகுதியில் கோரையாறு அருவியும், டாப் செங்காட்டுப் பட்டியில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் மங்கலம் அருவியும் உள்ளன. நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த வாரம் பெய்த மழையால், கோரையாறு, எட்டெருமைப்பாலி மற்றும் மங்கலம் அருவிகளில் அதிகளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான கைப்பிடி, இரும்புத் தடுப்புகள், நடைபாதை தளம் போன்றவை இல்லாததால், இந்த அருவிகளுக்கு சுற்றுலா பயணியரை அனுமதிப்பதில் வனத்துறையினர் தயக்கம் காட்டுகின்றனர். கோரையாறு அருவி, பாறைகள் நிறைந்த பகுதியில் இருப்பதால், இங்கு சுற்றுலா பயணியர் செல்ல, வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. கடந்த ஆண்டு, ஜூனில் இந்த அருவி நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்ததால் மங்கலம் அருவிக்கும் சுற்றுலா பயணியர் செல்ல வனத்துறை தடை விதித்து விட்டது. பச்சமலை மலையில், அதிகமான இயற்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஷோபனபுரம், மூலக்காடு வழியாக பச்சமலையை இணைக்கும் மலைப் பாதைகளை சீரமைப்பு செய்ததில் இருந்து, அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பச்சமலைக்கு, அதிகமானோர் வந்து செல்கின்றனர்.ஆனால், அருவிகளுக்கு செல்ல வனத்தறையினர் தடை விதித்திருப்பது, அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா துறையும் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். டாப் செங்காட்டுப்பட்டியில், 'வியூ பாயின்ட்' உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'இப்போது நிலவும் வானிலை மற்றும் நீர் வரத்து பாதுகாப்பற்றதாக உள்ளது. நீர் வரத்து குறைந்தவுடன், மங்கலம் அருவிக்கு, சுற்றுலா பயணியரை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றனர்.சுற்றுலா துறையினர் கூறுகையில், 'பச்சமலையில், 4 கோடி ரூபாயில் சுற்றுலா வளர்ச்சி திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. கோரையாறு அருவியை மறுசீரமைப்பு செய்வதும் இதில் அடங்கும்' என்றனர்.