| ADDED : ஆக 02, 2024 09:25 PM
திருச்சி:திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல், 60. சொந்தமாக தொழில் செய்கிறார். இவர் வீடு கட்டுவதற்காக, துவாக்குடி நகராட்சி பகுதியில் வீட்டுமனை வாங்கி இருந்தார். அந்த மனைக்கு வரி நிர்ணயம் செய்ய விண்ணப்பித்தார். விண்ணப்பம் நிலை குறித்து, சில நாட்களுக்கு முன், துவாக்குடி நகராட்சி பில் கலெக்டர் சவுந்தரபாண்டியனை, 40, அணுகினார்.அவரோ, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான், வரி நிர்ணயம் செய்ய முடியும் என்றார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிர்வேல், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மணிகண்டனிடம் புகார் அளித்தார்.போலீசாரின் அறிவுரைப்படி, நேற்று காலை, துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் வைத்து, லஞ்சப்பணம், 50 ஆயிரம் ரூபாயை கதிர்வேல் கொடுக்க, அதை சவுந்தரபாண்டியன் வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சவுந்தரபாண்டியனை கையும், களவுமாக பிடித்து, பணத்தை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர்.பின் அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.