உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ராமர் படத்தை கொளுத்திய விவகாரத்தில் 4 பேர் கைது

ராமர் படத்தை கொளுத்திய விவகாரத்தில் 4 பேர் கைது

திருச்சி:ராமர் படத்தை செருப்பால் அடித்து, தீயிட்டு கொளுத்தி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்ட விவகாரத்தில், ஐந்தாம் தமிழ் சங்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், விமான நிலையம் அடுத்துள்ள அயன்புத்துாரில், செப்., 28ம் தேதி, ஐந்தாம் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பின் சார்பில், வீட்டினன் விழா நடந்தது. விழாவில், ராவணனை புகழ்ந்து பேசியும், கடவுள் ராமரை இழிவுபடுத்தியும் பேசி உள்ளனர். ராமர் படத்தை செருப்பால் அடித்தும், அதை தீயிட்டு கொளுத்தியும் உள்ளனர். இதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இதைப்பார்த்த ஹிந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.,வினர், நேற்று முன்தினம் சம்பவம் நடந்த அயன்புத்துாரில் போராட்டம் நடத்தினர். அவர்களை நவல்பட்டு போலீசார் சமாதானம் பேசி அனுப்பினர். சம்பவம் குறித்து திருச்சி எஸ்.பி., அலுவலகத்தில், ஹிந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, புகாரை விசாரிக்க, சைபர் கிரைம் போலீசாருக்கு, திருச்சி எஸ்.பி., செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி, ராமரை அவமதிக்கும் வகையில், ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட, ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைப்பினர் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். அந்த அமைப்பை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம், கவரப்பட்டி அடைக்கலராஜ், 36, ராமநாதபுரம், சித்தன்கோட்டை திலகேஸ்வரன், 31, நாமக்கல் அத்தனுார் நெப்போலியன், 31, கள்ளக்குறிச்சி நெடுமானுார் வசந்தகுமார், 28, ஆகிய நால்வரை கைது செய்து, சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ