கணக்கில் வராத ஏராளமான பணம் சோதனையில் பறிமுதல்
திருச்சி:திருச்சி, திருவானைக்காவல் பகுதியில் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படுகிறது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் இங்கு திடீரென சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள பணியாளர்களிடம் கணக்கில் வராத, 68,900 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு துவங்கிய சோதனை, இரவு, 7:00 மணி வரை நடந்தது. யாரும் கைது செய்யப்படவில்லை. ↓வேலுார் மாவட்டம், ஆந்திரா எல்லையிலுள்ள காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, ஆர்.டி.ஒ., சோதனைச்சாவடியில் கணக்கில் வராத, 1.38 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில், கணக்கில் வராத 24,300 ரூபாயை கைப்பற்றி, விசாரிக்கின்றனர். காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 1.24 லட்சம் ரூபாயை கைப்பற்றி, விசாரிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 85,000 ரூபாய் சிக்கியது. துாத்துக்குடி அருகே புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இதுபோல, மாநிலத்தின் பல நகரங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.