ரயில்வே கேட்டில் சிக்கிய பள்ளி வேனால் பரபரப்பு
திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே திருச்சி - தஞ்சை ரயில் பாதையில், நேற்று மாலை 5:00 மணிக்கு, ரயில் வருவதற்காக கேட் மூடப்பட்டது. அப்போது, கேட் மூடுவதற்குள் அவசரமாக கடக்க நினைத்து, பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆம்னி வேன் வேகமாக வந்தது. கேட்டின் ஒரு பகுதிக்குள் நுழைந்து, மறுபகுதியில் நுழைவதற்குள், கேட் கீழே இறங்கி ஆம்னி வேன் மீது மோதியது. இதனால் கேட் லாக் ஆகி, ஆம்னி வேன் ரயில்வே டிராக்கில் நின்றது. மோதியதில் ரயில்வே கேட்டும் பழுதானது. கேட் கீப்பர், ரயில் வருவதற்கான சிக்னலை ஆப் செய்து, ரயிலை, பேட்டை பகுதியில் நிறுத்தினார். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பொதுமக்கள், வேனில் சிக்கியிருந்த, 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியரை மீட்டனர். பின் பழுதான ரயில்வே கேட்டை மூன்று மணிநேரம் போராடி ரயில்வே ஊழியர்கள் சீரமைத்தனர்.