உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் எட்டு பேர் மனு தாக்கல்: இருவர் மாற்று

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் எட்டு பேர் மனு தாக்கல்: இருவர் மாற்று

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை எட்டு பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்களில் இருவர் முக்கிய கட்சிகளின் மாற்று வேட்பாளர்களாவர். திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்த மரியம்பிச்சை சாலை விபத்தில் இறந்ததால், காலியாக உள்ள மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது. வேட்புமனு தாக்கல் துவங்கிய முதல்நாள், சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் 124வது முறையாக திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் 21ம் தேதி அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அருள்ஜோதி என்பவர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க., சார்பில் நேற்று முன்னாள் அமைச்சர் நேரு சார்பில், வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு மாற்று வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சேகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதுதவிர, நேற்று மதியம் தமிழக பிரஜ்ஜா ராஜ்ஜியம் கட்சி சார்பில் ரமேஷ் (32) என்ற எம்.காம்.,பட்டதாரி வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் தவிர கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுரேஷ் மற்றும் மனோகரன் என்ற இருவரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர். மொத்தத்தில், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட எட்டு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் இருவர் மாற்றுக்கட்சி வேட்பாளர்களாவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி