உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அரசியல் கட்சி பேனர் இருந்தால் இன்ஸ்பெக்டர் மீது : நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் மைக்கில் "கறார்

அரசியல் கட்சி பேனர் இருந்தால் இன்ஸ்பெக்டர் மீது : நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் மைக்கில் "கறார்

திருச்சி: ''திருச்சி மாநகரில் அகற்றப்படாமல் உள்ள பேனர்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி இன்ஸ்பெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து தெரிவித்துள்ளார். திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 13ம் தேதி நடக்கும் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அப்போது முதலே தேர்தல் நன்னடத்தை விதிகளும் திருச்சி மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கு தொகுதி முழுவதும் திருச்சி மாநகரின் வார்டுகளில் மட்டுமே வருகிறது. ஆகையால், மாநகரில் அரசியல் கட்சிகளின் பேனர்களை 24 மணிநேரத்தில் அகற்றிட வேண்டும் என்று, மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார். அதன்படி, நேற்று மாநகரில் சில அரசியல் கட்சி பேனர்கள் அகற்றப்பட்டது. பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது. இதையறிந்த கமிஷனர் மாசானமுத்து இன்ஸ்பெக்டர்களுக்கு மைக்கில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அப்போது, ''தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், மாநகரில் உள்ள அரசியல் கட்சி மற்றும் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள தனியார் பேனர்களை உடனடியாக அகற்றிட, அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று போலீஸாரை அவர் எச்சரித்தார். இதையடுத்து மாநகரில் உள்ள அரசியல் கட்சி பேனர்களை அகற்றும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை