| ADDED : செப் 13, 2011 01:04 AM
திருச்சி: போலீஸ்காரர்கள் என்று கூறி, மூதாட்டிகளிடம் 30 பவுன் நகையை
அபகரித்துச் சென்றவர்களை 'நிஜ' போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி
மாவட்டம் துறையூரைச் சேர்ந்த தேவரத்தினம் மனைவி சுசீலா (62). இவரது உறவினர்
திருச்சி புத்தூரைச் சேர்ந்த கவுசல்யா (60). நேற்று முன்தினம் காலை
கலெக்டர் அலுவலக ரோட்டில் உள்ள சங்கம் ஹோட்டலில் நடந்த உறவினர்
திருமணத்துக்கு இருவரும் சென்றனர். திருமணத்தை முடிந்து விட்டு, இருவரும்
புத்தூர் பகுதியில் காலை 10 மணியளவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது காரில் வந்த இருவாலிபர்கள் தங்களை போலீஸார் என்று
அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்களிடம், 'இவ்வளவு நகைகளை போட்டுக்
கொண்டு வயதான காலத்தில் நடந்து சென்றால், திருடிச் சென்றுவிடுவார்கள்.
அப்போது உங்கள் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம். ஆகையால், நகைகளை
காகிதப்பையில் போட்டு கொண்டு செல்லுங்கள்' என்று கூறியுள்ளனர். இதை நம்பிய
மூதாட்டிகள் இருவரும் தங்களின் நகைகளை நடுரோட்டிலேயே கழட்டி, அந்த
வாலிபர்கள் கொடுத்த காகிதப்பையில் போட்டுள்ளனர். அந்த பையை வாங்கி
வாலிபர்கள் மூடிக் கொடுத்துள்ளனர். மூதாட்டிகளும் வாலிபர்களின்
பொறுப்புணர்வை எண்ணி மெச்சியபடி வீடு போய் சேர்ந்துள்ளனர். வீட்டில்
பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது, அதில், கவரிங் நகைகளும், சிறு, சிறு
கற்களும் இருந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது தான்
தங்களை வாலிபர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து 30
பவுன் நகையை பறிகொடுத்தனர். இதுகுறித்து உறையூர் போலீஸில் மூதாட்டிகள்
இருவரும் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் என்று கூறி நகைகளை அபகரித்துச்
சென்ற போலி போலீஸாரை, நிஜ போலீஸார் தேடி வருகின்றனர்.