உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மகாளய அமாவாசை புனித நீராடல்

மகாளய அமாவாசை புனித நீராடல்

ஸ்ரீரங்கம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பக்தர்கள் புனித நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இந்துக்கள் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களை மிகவும் புனிதமாக கருதி வருகின்றனர். இதில், புரட்டாசி மாதம் வரும் அமாவாசை, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகின்றது. அமாவாசை தினங்களில் நம் மூதாதையர்கள் என்றழைக்கப்படும் பித்ருக்கள் விண்ணுலகத்தில் இருந்து மண்ணுலகத்திற்கு வருவதாக ஐதீகம். அன்று அவர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வாழ்வில் துன்பங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வினை அடையலாம். மகாளய அமாவாசையன்று ஏற்கனவே குறிப்பிட்ட நாட்களில் திதி கொடுக்க இயலாமல் போனவர்கள் திதி கொடுக்கலாம். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். நேற்று மகாளய அமாவாசை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியில் புனித நீராடினர். நீராடிய பின் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பண பூஜை செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மூழ்கியது. பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டதால் ஏராளமான போலீஸார் அம்மா மண்டபத்தில் குவிக்கப்பட்டனர். கொள்ளையர்கள் ஊடுருவாமல் இருக்க குற்றப்பிரிவு போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். ஜங்ஷனில் இருந்து அம்மா மண்டபம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களுக்கும் திருவானைக்கோவில் வழியாக ஸ்ரீரங்கத்திற்கு திருப்பி விடப்பட்டது. அதிகாலை ஐந்து மணி முதல் மாலை ஆறு மணி வரை பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ