சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு க்யூ ஆர் கோடு முறையில் பாஸ்
திருச்சி: 'ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு, 'க்யூ.ஆர்., கோடு' போட்டு பாஸ் வழங்கப்படுமா என்ற முழு விபரம் அறிவிக்கப்படும்,'' என, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வரும் 30ம் தேதி திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்குகிறது. டிச., 31ம் தேதி தொடங்கி ஜன., 9ம் தேதி வரை பகல் பத்து உற்வசம் நடைபெறும். ஜன., 10ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அன்று முதல், ஜன., 20ம் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழா ஏற்பாடுகளை, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மாநகராட்சி கமிஷனர் சரவணன் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.பின், கலெக்டர் பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில், ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி உற்சவ நாட்களில், தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கான அனுமதிச் சீட்டு, ஆன்லைன் மூலம் வழங்குவதா, நேரடியாக வழங்குவதா என்பது குறித்தும், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கான பாஸ், ஸ்கேன் செய்து, 'க்யூ ஆர் கோடு போட்டு வழங்கப்படுமா என்ற முழுமையான விபரம் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.