திருச்சி - ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் விரிசல் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு
திருச்சி: திருச்சி, சத்திரம் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காவிரி பாலம், 1976ல் கட்டப்பட்டது. தினமும் அதிகமான போக்குவரத்து காரணமாக, காவிரி ஆற்றுப் பாலமும், நடைபாதையும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானதால், 2022 செப்டம்பரில் பாலம் மூடப்பட்டு, 6.87 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாலம் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்த ஒன்றரை ஆண்டில் மீண்டும் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலம் இணைப்பு பகுதியிலும், அதே இடத்தில் பக்கவாட்டு கைப்பிடி சுவரிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கைப்பிடி சுவர் வெளிநோக்கி தள்ளப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆடிக் கொண்டிருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், காவிரி பாலத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியில், நேற்று போலீசார் தடுப்புகள் வைத்து உள்ளனர். பாலம் விரிசல் ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள், 'விரிசல் மற்றும் கைப்பிடி சுவர் இடிந்த இடத்தில், நடைபாதை தளத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட விபத்து ஏற்பட்டு, வாகனங்கள் மோதியுள்ளன. இதனால், பாலத்தின் இணைப்பு பகுதி சேதமடைந்துள்ளது. தனித்தனி பகுதியாக இணைக்கப்படும் கைப்பிடி சுவரில் இணைப்பு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், ஆபத்து நேராது. போக்குவரத்துக்கும் பாதிப்பு இருக்காது. இருப்பினும், சேதமடைந்த பகுதி விரைவில் சீரமைக்கப்படும்' என்றனர்.