அமைச்சர் மாவட்டத்தில் அவலம் ஆளுங்கட்சி கவுன்சிலரே குமுறல்
திருச்சி:அமைச்சர் நேருவின் சொந்த மாவட்டமான திருச்சியில், துறையூர் நகராட்சி பகுதியில் சுகாதார சீர்கேடு இருப்பதாக புகார் வாசித்துள்ள தி.மு.க., கவுன்சிலர் ஒருவர், சாக்கடையில் தானே இறங்கி துாய்மைப் பணி மேற்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும், சரிவர குப்பை மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், இந்த நகராட்சியின், 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஜெயகார்த்திகேயன், தன் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், ஒரு மாதத்திற்கு மேலாக சாக்கடைகளை சுத்தம் செய்யவில்லை; அதனால், கொசுக்கள் அதிகமாகி நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக, பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துஉள்ளார். நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தன் வார்டுக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி துப்புரவு பணியாளர்களை உதவிக்கு வைத்துக் கொண்டு, தானே களத்தில் இறங்கி ஜெயகார்த்திகேயன் நேற்று சாக்கடை அடைப்பை துார்வாரி சுத்தம் செய்தார்.நகராட்சி நிர்வாகத் துறைக்கு அமைச்சரான நேருவின் சொந்த மாவட்டம் திருச்சி. அமைச்சரின் மாவட்டத்திலேயே, நகராட்சி நிர்வாகத்தின் அவலத்தை, ஆளுங்கட்சி கவுன்சிலரே புகாராக வாசித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மற்ற மாவட்டங்களின் நகராட்சிகளின் துாய்மைப் பணிகள் கேள்வியை எழுப்பியுள்ளன.