திருச்சி: திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில் 576 பேரும், மேயர் பதவிக்கு 50 பேரும் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கடந்த சட்டசபை தேர்தலில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோதே, வி.வி.ஐ.பி., அந்தஸ்து பெற்றது ஸ்ரீரங்கம் தொகுதி. ஸ்ரீரங்கம் தொகுதியில் 41,848 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று, தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்ற பின்னர், ஸ்ரீரங்கம் தொகுதி மற்றும் திருச்சி மாவட்டத்துக்கு ஏராளமான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் லால்குடி தொகுதியில் மட்டுமே வெற்றிப்பெற்று, பெரும்பாலான மக்களால் புறக்கணிக்கப்பட்ட தி.மு.க.,வுக்கு, நில அபகரிப்புப்புகார்களில் மாவட்டச் செயலாளர் நேரு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது பேரிடியாக உள்ளது. முக்கிய எதிர்க்கட்சி பிரமுகர்கள் சிறையில் முடங்கிய நிலையில், அ.தி.மு.க.,வினரை மாநகராட்சித் தேர்தலில் எதிர்க்கொள்ள பலமான நபர்கள் இல்லாத நிலை உள்ளது. அதை நிருபிக்கும் வகையில் முடிந்துள்ளது அ.தி.மு.க.,வினரின் விருப்ப மனுத்தாக்கல் வைபவம். திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு கட்சியினர் விண்ணப்பிக்க, கடந்த ஒன்றாம் தேதி முதல் திருச்சி தேவர் ஹாலில், விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. மேயர் பதவிக்கு 25 ஆயிரம் ரூபாயும், கவுன்சிலர் பதவிக்கு 5,000 ரூபாயும் விருப்ப மனுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. துவக்கநாளில் இருந்தே ஏராளமான அ.தி.மு.க.,வினர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை வாங்கினர். இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில இணைச் செயலாளர் சரவணப்பெருமாள், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன், அ.தி.மு.க.,வினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர். மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், இணைச்செயலாளர் வளர்மதி, துணைச் செயலாளர்கள் அருள்ஜோதி, கோகிலா, அணிச் செயலாளர்கள் தமிழரசி, சீனிவாசன், பத்மநாபன், ராஜேந்திரன் உட்பட 50 பேர் மேயருக்கு விருப்ப மனுத்தாக்கல் செய்தனர். கலெக்டர், மேயர், துணைவேந்தர் என ஏற்கனவே 'மகளிர் மயமாக' மாறியுள்ள திருச்சி மாவட்டத்தில், மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் 15 பெண்கள் மேயர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். விருப்ப மனு வைபவம், முடிவுற்ற நிலையில், 65 வார்டுகள் (இதில் ஐந்து வார்டுகள் மாற்றத்துக்குரியது) கொண்ட மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, 576 அ.தி.மு.க.,வினர் விண்ணப்பத்துள்ளது குறிப்பிடத்தக்கது.