உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மாநகராட்சியுடன் புதிய பகுதி இணைப்பு இல்லை : 60 வார்டுக்கே உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டம்

மாநகராட்சியுடன் புதிய பகுதி இணைப்பு இல்லை : 60 வார்டுக்கே உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டம்

திருச்சி: திருச்சி மாநகராட்சிக்கு 60 வார்டுகளுக்கான நடைமுறைப்படி தான் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மாநகராட்சி எல்லை விஸ்தரிக்கப்பட்டு, 65 வார்டுகளுடன் தேர்தல் நடத்த அரசு தடை விதித்துள்ளதால் குழப்பம் தீர்ந்தது.திருச்சி மாநகராட்சியில் தற்போது 60 வார்டுகள் ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் ஆகிய நான்கு கோட்டங்களில் அடங்கியுள்ளது. மாநகராட்சியாக 1994ல் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது மாநகராட்சி 146.9 சதுர கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கடந்த 2001ம் ஆண்டின் கணக்கின் படி ஏழு லட்சத்து 52 ஆயிரம் பேர் மக்கள் தொகை கொண்டாத உள்ளது. தற்போது மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகை பெருக்கம், குடியிருப்பு, வணிக வளாகம் போன்றவவை வளர்ந்துள்ள நிலையில் மாநகராட்சியின் எல்லையை விஸ்தரிக்கவும், அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைந்து, விஸ்தரிப்பு செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.இதையடுத்து மாநகராட்சியுடன் திருவெறும்பூர் டவுன் பஞ்சாயத்து, பாப்பாகுறிச்சி, எல்லக்குடி, கீழ்கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர் ஆகிய நான்கு பஞ்சாயத்துகளையும் இணைத்து 65 வார்டாக உயர்த்த கடந்த நவம்பர் மாதம் அப்போதைய அரசு உத்தரவிட்டது. மாநகராட்சியுடன் இணைப்பது குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் தீர்மானம் கோரப்பட்டது. இதற்கு திருவெறும்பூர் டவுன் பஞ்சாயத்து, பாப்பாகுறிச்சி, எல்லக்குடி, கீழ்கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர் ஆகிய பஞ்சாயத்துகளிலும் எதிர்ப்பு கிளம்பியது. தலைவர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். இதனால், மாநகராட்சி எல்லையை விஸ்தரிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டது.உள்ளாட்சி தேர்தல் அக்டோபருக்குள் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. இதனால், மாநகராட்சி தேர்தல் புதிய எல்லை விஸ்தரிப்பு, உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து 65 வார்டுகளாக உருவான பின் தேர்தல் நடக்குமா? என்ற குழப்பம் நீடித்தது. நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'உள்ளாட்சி தேர்தல் குறிப்பிட்ட கால கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். புதிய பகுதிகளை இணைக்கும் நடவடிக்கையில் பிரச்சனை இருக்கும் பகுதிகளில், புதிய இணைப்பு பகுதிகளை கைவிட்டு பழைய முறையையே தொடரலாம்' என அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பால், மாநகராட்சியுடன் இணைய இருந்த திருவெறும்பூர் டவுன் பஞ்சாயத்து, பாப்பாகுறிச்சி, எல்லக்குடி, கீழ்கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர் ஆகிய பஞ்சாயத்துகளை நீக்கி விட்டு, பழைய 60 வார்டுகளை கொண்டே தேர்தல் நடத்த திருச்சி மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை