மண்ணச்சநல்லூர்: திருச்சி அருகே எஸ்.ஆர்.எம்., கல்வி குழுமத்தைச் சேர்ந்த இருங்களூர் டி.ஆர்.பி., இன்ஜினியரிங் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் தமிழரசன் வரவேற்றார். எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பச்சமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதலாமாண்டு பி.இ., வகுப்புகளை துவக்கிவைத்து பேசியதாவது: தலைமைப்பண்பு என்பது வகுப்பறையில் இருந்தே தொடங்குகிறது. மாணவர்கள் தலைமைப்பண்பை தொடர்ச்சியான பயிற்சியின் மூலமே பெற முடியும். சிறப்பான வேலைவாய்ப்பை பெறுவதற்கு கல்வியுடன் பிற திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும். வகுப்பறையில் 100 சதவீத வருகைப்பதிவு வாழ்க்கையில் உங்களை உயர்த்தும், கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் மனதை எப்பொழுதும் திறந்தே வைத்திருந்தால் வெற்றி தானே தேடி வரும். தொடர் பயிற்சி மூலம் கிராமப்புற மாணவர்களும் மொழித் தொடர்புத்திறனை வளர்த்துக்கொள்ள முடியும். வேலைவாய்ப்பில் உயர்நிலை வேலைகளுக்கு போட்டி குறைவாகவே உள்ளது. கீழ்நிலை அளவில்தான் போட்டிகள் அதிகமாக உள்ளது. உயர்மட்ட வேலைகளுக்கு போட்டியிடும் வகையில் நீங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கடந்தாண்டு 100 சதம் வருகை தந்த 56 மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கினார். விழாவில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை இயக்குனர் முத்தமிழ் செல்வன் பேசினார். துறைத்தலைவர் தியாகராஜன், கரிகால சோழன், செல்வகுமார், முருகானந்தம், ரம்யா, கீதா, எலிசபெத்ராணி, கோபிநாத், ப ணியமர்த்தும் அலுவலர் விக்டர் சூசை இருதயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளங்கோ நன்றி கூறினார். பின்னர், நடந்த விழாவில் சென்னை மருத்துவ கல்லூரியின் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., வகுப்புகளையும் எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பச்சமுத்து துவக்கி வைத்தார். மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கலைச்செல்வி, கல்லூரி துணைத்தலைவர் பார்க்கவன் பச்சமுத்து பேசினர். முதன்மை நிர்வாகி வெங்கடேசன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேசுதாஸ் பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.