உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஃபோட்டோவுடன் வாக்காளர் பட்டியல் வெளியீடு திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை 17.78 லட்சம்

ஃபோட்டோவுடன் வாக்காளர் பட்டியல் வெளியீடு திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை 17.78 லட்சம்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக உள்ளாட்சித்தேர்தலுக்கான ஃபோட்டோவுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் ஜெயஸ்ரீ நேற்று வெளியிட்டார். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 275 வாக்காளர்கள் உள்ளனர். விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளதால், தமிழகம் முழுவதும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் சுறுசுறுப்பாக நடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் மிகவும் மும்முரமாக நடக்கிறது. முதல்கட்டமாக செப்டம்பர் 12ம் தேதி ஓட்டுச்சாவடிகள் இறுதி பட்டியல்கள் வெளியிடப்பட்டது. ஊரகப்பகுதிகளில் 2,187 ஓட்டுச்சாவடிகளும், நகர்புறத்தில் 1,102 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நகர்புறப் பகுதிகளிலுள்ள ஓட்டுச்சாவடிகளுக்குத் தேவையான 2714 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவை. முதல்கட்டமாக 1510 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவற்றை பாரத் எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவன இன்ஜினியர்கள் பரிசோதனை செய்கின்றனர். மீதமுள்ள 1,204 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாநில தேர்தல் கமிஷனிடம் கோரப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளிலுள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான 6,000 சிறிய ஓட்டுப்பெட்டிகளையும், 2459 பெரிய ஓட்டுப்பெட்டிகளையம், ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது. ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்ப்டடுள்ளது.

திருச்சி மாவட்டம், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஃபோட்டோவுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டது. கலெக்டர் ஜெயஸ்ரீ வாக்காளர் பட்டியலை வெளியிட, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சந்தோஷ்குமார் பெற்றுக் கொண்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பஞ்சாயத்து) கல்யாணகுமார், (தேர்தல்) கோமதிசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். ஃபோட்டோவுடன் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ கூறுகையில், ''முதல் முறையாக உள்ளாட்சித்தேர்தலுக்கான ஃபோட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். உள்ளாட்சித்தேர்தல் வேட்புமனு இறுதி நாள் வரை புதிய வாக்காளர் விண்ணப்பிக்கலாம். அதன்பின் துணை வாக்காளர்பட்டியலுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,'' என்றார். தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டடியல் அந்தந்த நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.

மொத்தம் 14 யூனியன்களில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 220 ஆண், 4 லட்சத்து 84 ஆயிரத்து 665 பெண், 17 திருநங்கைகள் சேர்த்து 9 லட்சத்து 70 ஆயிரத்து 902 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 16 டவுன் பஞ்சாயத்துகளில் 75 ஆயிரத்து 460 ஆண், 76 ஆயிரத்து 635 பெண் 3 திருநங்கைகள் சேர்த்து ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 98 வாக்காளர்களும், ஒரு மூன்றாம் நிலை நகராட்சியில் 11 ஆயிரத்து 691 ஆண், 10 ஆயிரத்து 736 பெண் சேர்த்து 22 ஆயிரத்து 427 வாக்காளர்ளும் உள்ளனர். இரண்டு நகராட்சிகளில் 23 ஆயிரத்து 631 ஆண், 24 ஆயிரத்து 526 பெண் உள்பட 48 ஆயிரத்து 157 வாக்காளர்களும், திருச்சி மாநகராட்சியில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 383 ஆண், 2 லட்சத்து 94 ஆயிரத்து 272 பெண், 36 திருநங்கைகள் சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 84 ஆயிரத்து 691 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 34 உள்ளாட்சி அமைப்புகளில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 385 ஆண்கள், 8 லட்சத்து 90 ஆயிரத்து 834 பெண்கள், 56 திருநங்கைகள் என மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 275 வாக்காளர்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ