| ADDED : செப் 20, 2011 11:41 PM
மணப்பாறை: வையம்பட்டி அருகே நேற்று அதிகாலை அடுத்தடுத்த ஐந்து கடைகளில் தீப்பிடித்ததில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின. திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள குமாரவாடி, மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முருகேசன்(37). டீ கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 5.30 மணிக்கு வழக்கம்போல கடைக்குச் சென்று அடுப்பை பற்றவைத்துள்ளார்.அப்போது அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேன் மீது தீப்பொறி பட்டு கேன் தீப்பற்றி எரிந்து மளமளவென கடை முழுவதும் தீபற்றி எரிந்தது. அருகே இருந்த மாரிமுத்து(70) என்பவரின் பெட்டிக்கடை, மாரியப்பன்(42) கோழிக்கடை, கணேசன்(61) என்பவரது சலூன் கடை, விஜயகுமார்(28), டூவீலர் மெக்கானிக் ஆகிய அடுத்தடுத்து இருந்த ஐந்து கடைகளும் தீபற்றி எரிந்தன.
அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கடைகளில் இருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு மூன்று லட்ச ரூபாயாகும். மணப்பாறை எம்.எல்.ஏ., சந்திரசேகர், அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர் சேது, குமாரவாடி பஞ்சாயத்து தலைவர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.மணப்பாறை தாசில்தார் பெரியசாமி, ஆர்.ஐ., சின்னையா, வி.ஏ.ஓ., அழகர் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.