பாரதிதாசன் பல்கலையில் விஜிலென்ஸ் விசாரணை
திருச்சி:பாரதிதாசன் பல்கலை யில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொள்முதலில் ஊழல் நடந்தது தொடர்பான வழக்கில் , பல்கலையில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். தமி ழகத்தில் 2006 தி.மு.க., ஆட்சியின் போது, கவர்னராக சுர்ஜித்சிங் பர்னாலா இருந்தார். அவர் பல்கலைகளின் வேந்தராகவும் இருந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கவர்னர் மகன் ஜஸ்சித் சிங் என்பவர், தான் பங்குதாரராக இருந்த மின்னணு நிறுவனம் மூலம், தமிழகத்தில் உள்ள பல்கலைகளில் சிசிடிவி பொருத்தும் பணிகளை செய்துள்ளார். அந்த காலகட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக்கு கம்ப்யூட்டர்களும் கொள்முதல் செய்யப்பட்டன. இதில் ஊழல் நடந்ததாக, 2012ல், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். அதன் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இந்த வழக்கு விசாரணை முடங்கியது. நேற்று சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார், பாரதிதாசன் பல்கலைக்கு விசாரணைக்கு வந்தனர். இதற்காக, அப்போது பல்கலையின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று விசாரணைக்கு ஆஜரானவர்களிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர் . விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த அப்போதைய பல்கலை ஊழியர், ஓய்வு பெற்ற நிலையில், சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதும், இவ்வழக்கில் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.