ரூ.5,000த்துக்கு ஆசைப்பட்டு நகை கடத்திய பெண் கைது
திருச்சி:மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை, 'ஏர் ஏசியா' விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில், சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, 40 வயது பெண், தன் மேலாடைக்குள் மறைத்து, தங்க செயின்களை எடுத்து வந்தது தெரிந்தது. அந்த நகை, 359 கிராம் எடை இருந்தது. அந்த தங்க செயின்களின் மதிப்பு, 27.14 லட்சம் ரூபாய். தங்க செயின்கள் கொண்டு வந்தது குறித்து, அந்த பெண்ணிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அப்போது, 'திருச்சி வர டிக்கெட் எடுத்திருந்தேன். கோலாலம்பூர் விமான நிலையத்தில், என்னை தொடர்பு கொண்ட, அறிமுகம் இல்லாத நபர், செயின்களை கொடுத்து, திருச்சியில் சேர்த்து விட்டால், 5,000 ரூபாய் தருவர் என கூறினார். அதன்படி, எடுத்து வந்தேன். இப்போது சிக்கிக் கொண்டேன்' என்றார்.இதையடுத்து, அந்த பெண் மீது வழக்கு பதிந்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.