லாரி - பஸ் மோதி விபத்து பெண் பலி; இருவர் படுகாயம்
திருச்சி:திருச்சி அருகே லாரி மீது அரசு 'ஏசி' பஸ் மோதிய விபத்தில், பெண் உயிரிழந்தார். கண்டக்டர் உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர். திருச்சி, பஞ்சப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, தஞ்சைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு, 1 மணிக்கு ஒன் டு ஒன் அரசு ஏசி பஸ் புறப்பட்டது. பஸ்சை தஞ்சையை சேர்ந்த மணிகண்டன், 54, என்பவர் ஓட்டினார். பஸ் துவாக்குடி அரசு அச்சகம் எதிரில் சென்றபோது, அங்கு வலதுபுறம் திரும்புவதற்காக நின்றிருந்த டிரய்லர் லாரி மீது, அரசு பஸ் மோதியது. இதில் பஸ்சின் இடதுபக்க முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ்சின் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பேராவூரணியைச் சேர்ந்த செல்வி, 52, என்பவர் உயிரிழந்தார். மேலும், பஸ்சின் கண்டக்டர் மணிகண்டபிரபு தலையில் அடிபட்டும், தஞ்சை கல்லுாரி மாணவி அட்சயா, 20, என்பவரின் இரு கால்கள் முறிந்தும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். துவாக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.