பெண்ணை படம் பிடித்து சிக்கியவர் ஹவாலா பணம் கடத்தியது அம்பலம்
வேலுார்:பெங்களூருவிலிருந்து, சென்னைக்கு, 16.30 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கடத்திய வாலிபர், பஸ்சில் உடன் பயணித்த பெண்ணை மொபைல்போனில் போட்டோ எடுத்ததால் போலீசில் சிக்கினார்.துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, 25 வயது இளம் பெண், பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். இவர், வேலுாரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க, தன் கணவருடன் பெங்களூருவில் இருந்து வேலுாருக்கு, ஆம்னி பஸ்சில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். மாதனுாரில் உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது. அந்த பெண், அவரது கணவர் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்ட பின் மீண்டும் பஸ்சில் ஏறினர். அப்போது, பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவர், அந்த பெண்ணை மொபைல்போனில் புகைப்படம் எடுத்தார். காத்திருப்பு
அப்பெண், தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் மொபைல் போனை பறித்து பார்த்ததில், பெண்ணின் புகைப்படம் இருந்தது. இது குறித்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. வேலுார் வடக்கு போலீசார், வேலுார் கிரீன் சர்க்கிள் அருகே பஸ்சுக்காக காத்திருந்தனர்.பஸ் வேலுார் வந்ததும், போலீசார் அந்த வாலிபரை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர், துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தை சேர்ந்த சையது இத்திரிஸ், 27, என, தெரியவந்தது. அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில், 16.30 லட்சம் ரூபாய் இருந்தது. போலீசார் அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சையது இத்திரிஸ் கொண்டு வந்தது ஹவாலா பணம் என, தெரிய வந்தது. விசாரணை
பெங்களூருவிலிருந்து, பணத்தை எடுத்து சென்று சென்னையில் உள்ள நபரிடம் ஒப்படைத்தால் அவருக்கு, 4,000 ரூபாய் கமிஷன் கிடைக்கும் என, தெரிவித்துள்ளார். வேலுார் வடக்கு போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர் யாரிடம் பணத்தை பெற்றார்; சென்னையில் யாரிடம் கொடுக்க சென்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.