உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் /  சுற்றுலாத்துறை அனுமதி, பாதுகாப்பு கவசமின்றி படகு சவாரியை துவக்கிய அமைச்சர் துரைமுருகன்

 சுற்றுலாத்துறை அனுமதி, பாதுகாப்பு கவசமின்றி படகு சவாரியை துவக்கிய அமைச்சர் துரைமுருகன்

காட்பாடி: சுற்றுலாத்துறையின் அனுமதி எதுவும் பெறாமல், அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்த படகு சவாரி திட்டம், நான்கு நாட்களில் மூடப்பட்டது. வேலுார் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் உள்ள இரட்டை ஏரிகளான தாராபடவேடு ஏரி மற்றும் கழிஞ்சூர் ஏரிகளை, 36.59 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணிக்கு, 2022 டிச., 7ல், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார். ஏரிக்கரைகளை பலப்படுத்தி, கரையின் ஓரத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில், 6 கி.மீ., நீளத்திற்கு நடைபாதை அமைக்கப்பட்டது. ஏரிகளில் படகு சவாரி செய்யும் வகையில், இரு ஏரிகளிலும் தலா ஒரு படகு குழாம் அமைக்கப்பட்டது. படகு சவாரி சுற்றுலா தலத்தை அமைச்சர் துரைமுருகன் நவ., 17ல் திறந்து வைத்தார். இதையடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதி மக்கள், குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதற்கிடையே, சில நாட்களுக்கு முன், இரு ஏரிகளிலும் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் குடும்பத்துடன் வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். சுற்றுலாத்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெறாததால், படகு சவாரி நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் கூறுகையில், 'அமைச்சர் திறந்து வைத்த பின், நான்கு நாட்களுக்கு சோதனை ஓட்டமாக பொதுமக்கள் படகு சவாரி செய்தனர். தற்போது படகு சவாரி மேற்கொள்ள மாநில சுற்றுலாத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். 'அனுமதி அளித்ததும், டெண்டர் விடப்பட்டு, படகு சவாரி துவங்கப்படும்' என்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மக்களை வைத்து சோதனை ஓட்டம் நடத்தலாமா? 'விபத்து நிகழ்ந்திருந்தால் யார் பொறுப்பு? முறையான அனுமதி பெறப்பட்டதா என்றுகூட மூத்த அமைச்சர் துரைமுருகன் கேட்டிருக்க மாட்டாரா?' என குற்றஞ்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை