ஜி.ஹெச்.,ல் இருந்து தப்பிய கைதி கைது; அலட்சிய போலீஸ் 4 பேர் சஸ்பெண்ட்
வேலுார்: வேலுாரில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியது தொடர்பாக, 4 போலீசார், 'சஸ்பெண்ட்' ஆன நிலையில், தப்பிய கைதி போலீசில் சிக்கினார். வேலுார் மாவட்டம், காட்பாடியில், கடந்த, 2021 ல் சாலையோரம் துாங்கிய பிச்சைக்காரர் ஒருவரை கொன்ற வழக்கில், கேரளாவை சேர்ந்த பாபு அகமது ஷேக், 55, என்பவர் ஆயுள் தண்டனை பெற்று, வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 15 ல் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, வேலுார், அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணியளவில் அவர் மருத்துவமனையிலிருந்து தப்பியோடினார். இது தொடர்பாக பணியில் அலட்சியம் காட்டிய போலீஸ்காரர்கள், பொற்கை பாண்டியன், கோகுல், சத்தியமூர்த்தி, கண்ணன் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து வேலுார் எஸ்.பி., மதிவாணன் உத்தரவிட்டார். இந்நிலையில், தப்பியோடிய கைதி, வேலுார் அடுத்த கணியம்பாடி ஏரிக்கரையில் பதுங்கியிருந்தபோது, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.