கோழி தீவன லாரி கவிழ்ந்து பெண் பலி; டிரைவரும் சாவு
குடியாத்தம்: குடியாத்தம் அருகே கோழி தீவனங்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மற்றும் லாரி டிரைவர் உயிரிழந்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சைனகுண்டாவை சேர்ந்தவர் சுப்பிரமணி, 50; விவசாயி. இவரது மனைவி தேவி, 45. இவர், மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். குடியாத்தம் அடுத்த பலமனேரியை சேர்ந்தவர் பைசுல்லா, 63; லாரி டிரைவர். இவர், நேற்று பலமனேரியில் இருந்து திருச்செங்கோடுக்கு கோழி தீவனங்களை லாரியில் ஏற்றி சென்றார். சைனகு ண்டா மழலையர் பள்ளி அருகே வந்தபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தேவி மீது மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், உடல் நசுங்கி தேவி, பைசுல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குடியாத்தம் தாலுகா போலீசார் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு விசா ரிக்கின்றனர்.