உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 6,751 மாணவர்கள்  பயன்

தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 6,751 மாணவர்கள்  பயன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 67.51 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 6,751 மாணவர்களுக்கு, இம்மாதம் முதல் மாதாந்திர உதவித்தொகை 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.இது குறித்து, விழுப்புரம் கலெக்டர் பழனி கூறியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநில வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும், பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.தமிழகம், அனைத்து துறைகளிலும் முதன்மை பெற வேண்டும், அதற்கு அனைவரும் கட்டாயம் கல்வி அறிவு பெற்றிருப்பதோடு, ஏற்றத்தாழ்வுகளின்றி அனைவருக்கும் கட்டாயம் கல்வி கிடைத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும், கிராமப்புற மாணவ, மாணவிகள் அனைவருக்கும், உயர் கல்வி படிக்க வழிகாட்டியுள்ளார். இதற்காக, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார்.வரலாற்று சிறப்புமிக்க திட்டமான உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் முதல்வர் அறிவித்தார்.அதன்படி, தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசால் நடப்பு நிதி ஆண்டிற்கு 360 கோடி, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து, கோயம்புத்தூர் அரசு கல்லுாரியில் விழாவில் இத்திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து, அடுத்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, மாதம் தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை அவர் தொடங்கி வைத்துள்ளார்.விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தில், 77 கல்லுாரிகளில் படித்து வரும் 6,751 மாணவர்களுக்கு, 1000 ரூபாய் வீதம் உதவித்தொகை இந்த மாதத்திலிருந்து வழங்கப்படுகிறது. இதற்காக 67 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இவ்வாறு கலெக்டர் பழனி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ